உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் கனரக வாகனங்கள் காலை மாலை நகருக்குள் வர தடை; தீபாவளி நெரிசலை தவிர்க்க காவல்துறை அறிவிப்பு

சிவகாசியில் கனரக வாகனங்கள் காலை மாலை நகருக்குள் வர தடை; தீபாவளி நெரிசலை தவிர்க்க காவல்துறை அறிவிப்பு

சிவகாசி : தீபாவளி கூட்ட நெரிசல் காரணமாக சிவகாசியில் காலை , மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களை கொண்டு வரவும், உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லவும் தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் நகருக்குள் வருகிறது. தீபாவளிக்கு பட்டாசு வாங்குவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி கார்களில் சிவகாசி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் லாரி உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் வருவதற்கு காவல்துறை சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகர் மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் இன்று (அக். 1) முதல் காலை 7:00 முதல் 10:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் இரவு 10:00மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கும், லாரிகளில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோட்டோரம் போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதமாக வாகனங்களை நிறுத்தவும், ரோட்டில் நிறுத்தி பொருள்களை ஏற்றி, இறக்குவதும் கூடாது. இதனை மீறும் பட்சத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், லாரி ஓட்டுநர்கள், லாரி செட் உரிமையாளர்கள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள், பட்டாசு கடை உரிமையாளர்கள் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என டி.எஸ்.பி., பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !