இன்றும், நாளையும் வேலை நாள் ஈடு செய்யும் விடுப்பு அவசியம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
விருதுநகர்:தமிழகத்தில் இன்று (அக்., 11) நடக்கும் தமிழ் திறனறி தேர்வு, நாளை (அக்., 12) நடக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்களை தொடர்ச்சியாக விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடுத்துவது ஓய்வின்றி பணிபுரியும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே ஈடு செய்யும் விடுப்பு வழங்குவது அவசியம் என விருதுநகரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: இன்றைய தமிழ் திறனறி தேர்வு, நாளைய ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு முதுகலை ஆசிரியர்களை தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதன் மூலம் 14 நாட்கள் ஓய்வின்றி பணிபுரியும் நிலையை ஏற்படுத்துகிறது. இந்நிலை ஆசிரியர்களின் உடல்நிலையை பாதிப்பது மட்டுமின்றி மனசோர்வுக்கும் வழிவகுக்கிறது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் வேளையில் இப்பணிச்சுமை கற்பித்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக 14 நாட்கள் வேலை என்பது மனித உரிமையை பாதிக்கும் செயல். இந்நிலையை மாற்ற உடனடியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தேர்வு துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் திறனறி தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களும் பங்கேற்பதால் தனியார் பள்ளி ஆசிரியர்களையு குறிப்பிட்ட சதவீதத்தில் பயன்படுத்த அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இரு நாட்களும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து துறை இயக்குனர்களுக்கு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.