விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
தளவாய்புரம்; தளவாய்புரம் அருகே கூலி உயர்வு கேட்டு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தளவாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில் 1000க்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் காட்டன் ரக சேலைகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு உயர்வு வழங்கிய நிலையில் இந்த ஆண்டுக்கான 5 சதவீத கூலி உயர்த்தி வழங்கப்படவில்லை. இது குறித்து பிப். 21 முதல் விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.இதனை அடுத்து ஏ.ஐ.சி.டி.யூ., சி.ஐ.டி.யூ. சங்கத்தைச் சேர்ந்த ராமர், அய்யனார் தலைமையில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன்: கோரிக்கையை விசைத்தறி உரிமையாளர்களிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக அவகாசம் கேட்டோம். சங்கத்தினர் சார்பில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளனர். விரைவில் தீர்வு காணப்படும்.