உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரச்னையும் தீர்வும் செய்தி

பிரச்னையும் தீர்வும் செய்தி

சாத்துார்: சாத்துார் வைப்பாறு முள்செடிமுறைத்து காடாக மாறி வருவதோடு கழிவுநீர் கலந்து வருவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு ஊராட்சிகளின் குடிநீர் உறை கிணறும் பாழாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.வெம்பக்கோட்டையில் உற்பத்தியாகும் வைப்பாறு இறவார் பட்டி, சல்வார் பட்டி, அச்சங்குளம் ,சங்கரநத்தம், படந்தால், ரங்கப்ப நாயக்கன்பட்டி, வடமலாபுரம், ஊஞ்சம்பட்டி, சாத்துார் நகராட்சி, ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.ஆற்றில் ஊராட்சிக்காகவும் நகராட்சிக்காகவும் பல்வேறு குடிநீர் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இறவார் பட்டி துவங்கி சாத்துார் நகராட்சி பகுதி வரை உள்ள வைப்பாற்றில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்து வருகிறது.இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் மாசு அடைந்த நிலையில் உள்ளது. படந்தால் ஊராட்சி பகுதிக்குட்பட்ட முத்துராமலிங்கபுரம் வசந்தம் நகர் தென்றல் நகர்அருந்ததியர் காலனி பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் முழுவதும் ஆற்றில் கலந்து வருகிறது.இதன் காரணமாக ஆற்றில் உள்ள உறை கிணறில் தண்ணீரின் தரம் மாறி வருகிறது. நகராட்சி பகுதியிலும் வார்டு வாரியாக குடிநீர் உறைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தண்ணீர் மாசு அடைந்து வருவதால் ஆற்றில் உறைகிணறுகள் இருந்த போதும் அதை பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளது.நகராட்சிக்கு சொந்தமானஆறு உறை கிணறுகள்தற்போது தண்ணீர் மாசுஅடைந்து போனதால் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி பொருளாக உள்ளன. இதே போன்று பல்வேறு ஊராட்சிகளில் உள்ள உறை கிணறுகளும் வரும் காலத்தில் மாசடைந்த தண்ணீரால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் நிலை உள்ளது.மேலும் ஆற்றில் தற்போது அதிகளவு முள் செடி முளைத்து வருகிறது. இந்த முள் செடியால் ஆறு இருக்கும் இடம் கூட தெரியாத வகையில் அடர்த்தியாக வளர்ந்து வருவதால் ஆற்றுக்குள் மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.சாத்துாரில் தைப்பொங்கலை முன்னிட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மணல்மேட்டு திருவிழாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் போனதற்கு அதிகளவில் வளர்ந்துள்ள முள் செடியே காரணம்.மாசு அடைந்த தண்ணீரில் தற்போது ஆடு மாடுகளை கூட குளிப்பாட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆற்றுத்தண்ணீர் மேலே பட்டாலும் அரிப்பு ஏற்படுகிறது.கழிவு நீர் அதிக அளவில் கலந்து வரும் நிலையில் வைப்பாற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

துர்நாற்றத்தால் அவதி

கார்த்திக், சாத்துார்:ஆற்றின்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலக் காந்திநகர், போக்குவரத்து நகர்,அண்ணா நகர் வசந்தம் நகர் பகுதியில் வைப்பாற்றில் அதிக அளவில் வளர்ந்துள்ள முள் செடியில் இருந்து இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன.கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் முள் செடியை அகற்றவும் வேண்டும்.

குடிநீரை விலைக்குவாங்கும் நிலை

அய்யப்பன், சாத்துார்: வைப்பாற்றில் கோடை காலத்தில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வருடம் முழுவதும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் விலை உருவாகியுள்ளது. ஆற்றில் தண்ணீர்ஓடினால் மீன்கள் அதிக அளவில் வரும். ஆனால் தற்போது கழிவுநீர் கலந்து வருவதால் மீன்கள் கூட உயிர் வாழ வில்லை. மணல் பரந்து விரிந்து காணப்பட்ட ஆற்றில் தற்போது முள்செடி தான் அதிக அளவில் வளர்ந்துஉள்ளது. இழந்து போன ஆற்றின் அழகை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு

ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை ஒருங்கிணைத்து கழிவுநீர் செல்ல தனியாக வாறுகால் கட்ட வேண்டும்.இந்த வாறுகால் மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிப்புக்கு பின் ஆற்றில் கலக்க செய்ய வேண்டும்.ஆற்றில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாசு அடைந்து வருவதால் நிலத்தடி நீர் மாசு அடைவதை தடுக்க இதுவே தீர்வு ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ