சீனிவாச பெருமாள் கோயிலில் நாளை புரட்டாசி முதல் சனி உற்ஸவம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை முன்னிட்டு நாளை (செப்.21) அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இக் கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சீனிவாச பெருமாளை தரிசிக்க தென் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.இந்த ஆண்டும் நாளை (செப். 21 ) முதல் சனிக்கிழமை உற்ஸவம்துவங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை, சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இதையடுத்து பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை, மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் கிரிவலம் நடக்கிறது.புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான அக்.5 அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.