டிச.16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி பணி துவக்கம்
விருதுநகர்: தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடைகளின் கால், வாய் பகுதிகளை தாக்கும் கோமாரி நோய்க்கு தடுப்பூசி முகாம் கோடை, குளிர் காலங்கள் என ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தற்போது கால்நடைகளை தாக்கும் நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் மாடுகளுக்கு வாய், கால், மடியில் கொப்புளங்கள், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைதல், கன்றுகள் இறப்பு, சினைப்பிடிக்காதிருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக தென்படுகிறது.நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான மருத்துவ சேவைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. நோய்பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களில் தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்து செலுத்தப்படுகிறது.இந்நிலையில் நாடு முழுதும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை டிச.,16ல் இருந்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் பரவாமல் தடுக்கப்படும்.