உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையினால் செண்பகத் தோப்பு பேயனாறு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழை பெய்து அணைகள், கண்மாய்கள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு பகுதிகளில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விவசாயிகள் உற்சாகத்துடன் நெல் சாகுபடி செய்தனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாமல் கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு விடும் நிலை காணப்பட்டது.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் மாலை, இரவு நேரங்களில் நகர் பகுதிகள் மட்டுமின்றி ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத் தோப்பு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தற்போது அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட துவங்கி உள்ளது.கடந்த 3 நாட்களாக செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. மம்சாபுரம் பகுதி கண்மாய்களுக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது.இதேபோல் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளது.இதனால் பெரியாறு அணையில் தற்போது 31 அடி உயரத்திற்கும், கோவிலாறு அணியிலும் 26 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு போல் தொடர்ந்து மழை பெய்து அனைத்து கண்மாய்கள் அணைகள் குளங்கள் நிரம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சாகுபடியை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை