உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மழைநீர் வரத்து ஓடை அடைப்பு விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர்

 மழைநீர் வரத்து ஓடை அடைப்பு விளைநிலங்களில் தேங்கும் தண்ணீர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோட்டில் உள்ள மழைநீர் வரத்து ஓடை அடைப்பட்டு போனதால் தண்ணீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்களை பாழாக்குகிறது. அருப்புக்கோட்டை- விருதுநகர் ரோடு பகுதியில் புளியம்பட்டி கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் விருதுநகர் ரோடு வழியாக மழை நீர் வரத்து ஓடையில் சென்று ரோட்டை கடந்து அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் சேர்ந்து அங்கிருந்து திருவிருந்தாள் புரம், போடம்பட்டி உள்ளிட்ட 12 மேற்பட்ட கன்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைந்து துாத்துக்குடி மாவட்டம் வைப்பாறும் சேரும் வகையில் அமைப்பு உள்ளது. 4 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ரோட்டை கடப்பதற்கு முன் உள்ள பாலம் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற முடியாமல் உள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் துார்வாரினால் தான் மழை வெளியேறும் என மக்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கன மழையில் ஓடையில் சென்ற மழைநீர் வெளியேற முடியாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்களை பாழாக்கியது. இதுகுறித்து காவிரி, குண்டாறு, வைகை விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து இது குறித்து மனு அளித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் தற்போது பெய்த மழையில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் செலவழித்தும் பாதிப்பால் மனம் உடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி