ராஜபாளையம், ஏழாயிரம்பண்ணையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 கடைகள் உட்பட 7 கட்டடங்களை உயர் நீதிமன்ற உத்தரவு படி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய தெரு கோதண்ட ராம சுவாமி கோயில் முன் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கடைகள் வீடு கட்டப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி நேற்று நகராட்சி வருவாய்த்துறை இணைந்து அளவீடு செய்து போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்பில் இருந்த 4 கடைகள், 1 வீடு, 3 வீடுகளின் சுற்றுப்பகுதி உள்ளிட்ட ஏழு ஆக்கிரமிப்பு கட்டடங்களைமண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை வருவாய்த் துறையினர் சமாதானம் செய்தனர். * ஏழாயிரம் பண்ணை ஊராட்சியில் மெயின் ரோடு, கோவில்பட்டி சங்கரன்கோவில் செல்லும் சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் நெரிசலால் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி செயற்பொறியாளர் அபிநயா, போலீசார் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு கடைகள், படிகள், தளங்களை இடித்து அகற்றினர். பலர் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விட்ட நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றாத சில கட்டடங்களின் படிகளை அகற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.