பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல்:புதிய கலெக்டர் உறுதி
விருதுநகர்: பட்டாசு தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை என விருதுநகர் மாவட்ட புதிய கலெக்டர் ஷரண்யா அறி கூறினார். மாவட்டத்தின் 26வது கலெக்டராக ஷரண்யா அறி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீரின்றி ஏதும் இல்லை என்பதால் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளையும் புனரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலைக் கொடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் கர்ப்பிணிகள், டீன் ஏஜ் பெண்கள், குழந்தைகளுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து குறித்த சிறப்பு திட்டங்கள், படித்த தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேர்மையான, மக்கள் எளிதாக அணுகக்கூடிய கலெக்டராக வெளிப்படைத்தன்மையுடன் நான் செயல்படுவேன். மக்கள் எனது அலுவலக தொலைபேசி எண்ணான 94441- 84000-இல் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். பள்ளிக்கல்வித்துறையில் இடைநிற்றலை குறைத்து, தேர்ச்சி விகிதத்தில் முன்னணி மாவட்டமாக உருவாவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும், என்றார்.