பள்ளி கல்லுாரி செய்திகள்
மினி மாரத்தான் ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி, ஐ.டி.பி.ஐ., வங்கி, ரோட்டரி சங்கம், அஜந்தா ஸ்வீட்ஸ், ஆர்.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. 8ம் வகுப்பு முதல் பிளஸ் -2 மாணவர்களுக்கான போட்டிகளில் 300 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். போட்டி பண்ணையார் ஆர்ச் தொடங்கி இன்ஜினியரிங் கல்லுாரி வரை நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.20 ஆயிரம், பதக்கம் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன், மேலாளர் செல்வராஜ் வரவேற்றனர். ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர் பிரபுராம் செய்தார். யோகாவில் சாம்பியன் விருதுநகர்: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடந்த மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான யோகா போட்டியில் விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி யோகா அணி தொடர்ந்து 4வது முறையாக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. மேலும் அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான போட்டியில் மதுரை காமராஜர் பல்கலை யோகா அணி சார்பில் பங்கேற்க கல்லுாரி அணி தகுதி பெற்றுள்ளது. மாணவி பவதாரணி, தனி நபர் ரிதம்மிக் யோகா போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டியில் வென்ற மாணவிகளை கல்லுாரி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள், யோகா ஆசிரியர்கள் உட்பட பலரும் வாழ்த்தினார்.