அசுர வேகத்தில் செல்லும் பள்ளி வாகனங்கள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பள்ளி வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் பெற்றோர் பீதியில் உள்ளனர். வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் இருபதுக்கு மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. இது தவிர வெளியூர்களிலிருந்தும் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அருப்புக்கோட்டைக்கு வந்து செல்கின்றன. அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி வாகனங்கள் மாணவர்களை ஏற்றிக்கொண்டு காலை மாலை நேரத்தில் அதிவேகமாக செல்கின்றன. நகரில் ரோடுகள் சேதம் அடைந்தும் குண்டும் குழியுமாக இருப்பதாலும் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இந்த ரோட்டில் பள்ளி வாகனங்கள் வேகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் சொக்கலிங்கபுரம் ரத வீதி தினமும் பள்ளி வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பந்தல்குடி ரோட்டில் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் முன்பு வேகமாக வந்த பள்ளி வாகனம் டூவீலரில் வந்த தம்பதி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை காலை மாலை நேரங்களில் சரி செய்யவும் போக்குவரத்து போலீசார் முனைப்பு காட்டுவதில்லை. வேகமாக செல்லும் பள்ளி வாகனங்களை நிதானமாக செல்ல அறிவுறுத்துவதும் இல்லை.இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர், டிராபிக் போலீசார் வேகமாக செல்லும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.---