விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவர்கள், இரைப்பை, குடல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை,வாஸ்குலர் அறுவை சிகிச்சை டாக்டர்கள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் தமிழக அரசால் நிரப்பப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை தொடர்கிறது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டு தற்போது நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 1276 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டு செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு திட்டத்தில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., உள்பட பல்வேறு பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு சிறுநீரக கோளாறுகள் சம்பந்தமாக தினமும் 50 பேர் வரை வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தலைமை டாக்டர்களின் ஆலேசானையும், அனுபவமும் இன்றியமையாததாகிறது. சிறுநீரக சிகிச்சை பிரிவை மேம்படுத்த கூடுதல் டாக்டர்கள் நியமனம் தேவைப்படுகிறது. கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் மாதத்திற்கு 75 நோயாளிகள் வரை மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதே போல இரைப்பை, குடல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததால் மாதத்திற்கு சராசரியாக 120 நோயாளிகளும், ரத்த நாளங்கள் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கவும், தமனிகள் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு வாஸ்குலர் அறுவை சிகிச்சை டாக்டர்கள் இல்லாததால் மாதத்திற்கு 30 நோயாளிகளை மதுரைக்கு மாற்ற வேண்டிய நிலை தொடர்கிறது. குழந்தைகளுக்கான பிறப்புக் குறைபாடுகள் உள்பட அவர்களுக்கான பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால் மாதத்திற்கு 60 பேர் வரை மதுரைக்கு மாற்றப்படுகின்றனர். விபத்துக்களின் போது தலைக்காயங்கள் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுதல், மேல்சிகிச்சைக்கு பிற மாவட்டத்திற்கு மாற்றப்படுவதை தடுக்க சிறுநீரக மருத்துவர்கள், இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், வாஸ்குலர் அறுவை சிகிச்சை டாக்டர்கள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.