சாத்துாரில் சொத்து வரி கட்டாதவர் கடை முன் செப்டிக் டேங்க் வாகனம் நிறுத்தம்
சாத்துார்: சாத்துாரில் நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதவர் கடை முன்பு செப்டிக் டேங்க் வாகனம் நிறுத்தி வைப்பதிருப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சாத்துாரை சேர்ந்தவர் ஸ்ரீராம், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் டூவீலர் ேஷாரும் நடத்தி வருகிறார். இவரிடம் மார்ச் 18ல் நகராட்சி வரி வசூல் அலுவலர்கள் ரூ.1,20,572க்கு சொத்து வரி கட்ட வேண்டுமென நோட்டீஸ் அளித்துஉள்ளனர்.தான் கோயில் இடத்தில் வாடகைக்கு இருப்பதாகவும் சொத்து வரி கட்ட வேண்டியது கோயில் நிர்வாகமே தவிர தான் கிடையாது என நகராட்சி அலுவலரிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த நகராட்சி அலுவலர்கள் செப்டிக் டேங்க் வாகனத்தை கடை முன்பு நிறுத்தியுள்ளனர். ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்
சாத்துார் நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீராம் மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. கோயில் நிர்வாக அலுவலரிடம் ஏற்கனவே ரூ.1,20,572 சொத்து வரி கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாக அலுவலர் ஸ்ரீராம் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுக்கு ரூ. 3,20,000 வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் வாடகையை கட்டினால் சொத்து வரியை கட்டுவதாக கூறியிருந்தார். இது குறித்து பல முறை நான் நேரில் சென்று கேட்டும் சொத்து வரி கட்டவில்லை மார்ச் 30க்குள் வரி வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.இன்று மதியத்திற்குள் சொத்து வரியை கட்டி விடுவதாக வக்கீல் மூலம் வந்து பேசினார்கள்.இதுவரை கட்டவில்லை. வரி கட்டாததால்ஜப்தி செய்வதற்காக அங்கு செப்டிக் டேங்க் லாரிநிறுத்தப்பட்டுள்ளது. வரி கட்டாவிட்டால் அடுத்த கட்டமாக வக்கீல் மூலம் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.சாத்துார் நகராட்சி நிர்வாகம் வரி வசூலில் கெடுபிடி காட்டுவதோடு இதுபோன்று வியாபாரம் செய்பவர்கள் கடை முன்பு செப்டிக் டேங்க் வாகனத்தை நிறுத்தி இடையூறும் செய்வதால் வியாபாரிகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.