அரசு மருத்துவமனை சீமாங்க் சென்டர்களில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமவனை சீமாங்க் சென்டர்களில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் பணி சுமையால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய பகுதிகளில் சீமாங்க் சென்டர்கள் உள்ளது. மகப்பேறுவின் போது ஏற்படும் தாய், சேய் இறப்புகளை குறைப்பதற்காக அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.மேலும் மகப்பேறுவின் போது ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள மையங்களில் அரசு விதிகளின் படி 27 மகப்பேறு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 11 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களும் 2, 3 நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, பிரசவத்திற்கு அதிக செலவாவதால் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பாமல் தாய், சேய் இறப்புகளை தடுக்க வேண்டும் என அரசாங்கம் மருத்துவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே மாவட்டத்தில் உள்ள சீமாங்க் சென்டர்களில் மகப்பேறு மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.