ஸ்ரீவி.,யில் இரு பிரிவினர் மோதல் கல்வீச்சில் எஸ்.ஐ., காயம் 34 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் கோயிலுக்கு ஒரு தரப்பினர் செல்லும்போது தகராறு ஏற்பட்டு நடந்த கல்வீச்சு சம்பவத்தில் எஸ்.ஐ., பெண் ஒருவர் காயமடைந்தனர். இருதரப்பைச் சேர்ந்த தலா 17 பேர் மீது வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண வரவேற்பில் பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. வன்னியம்பட்டி போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்தனர். சமரசம் ஏற்படவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தங்கள் கோயில் திருவிழாவிற்கு அம்மனுக்கு படையல் எடுத்துப் போக, மற்றொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக செல்லும் போது தகராறு ஏற்பட்டது.கல்வீச்சு நடந்ததில் எஸ்.ஐ., கருப்பசாமி மூக்கில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. அதே பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்ற பெண்ணும் காயமடைந்தார். இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.டி.எஸ்.பி., ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ பகுதியை எஸ்.பி., கண்ணன் நேற்று பார்வையிட்டார். மீண்டும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.செண்பகவல்லி புகாரில் ஒரு தரப்பை சேர்ந்த 17 பேர் மீதும், முனிராஜ் புகாரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த 17 பேர் மீதும் வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.