மேலும் செய்திகள்
கான்பூர் - மதுரை ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
15-Jan-2025
ராஜபாளையம்: செங்கோட்டை- - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக பிப்., 20 வரை 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த ரயிலை அதே பெட்டிகளுடன் நிரந்தரமாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சென்னை எழும்பூர் -- காரைக்குடி இடையே 2013 முதல் இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் 2017 மார்ச் முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளது. இதனால் 2019 பிப்., முதல் வாரம் மூன்று நாட்களாக இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயில் நவம்பர் முதல் தாம்பரத்தில் இருந்து தற்காலிகமாக ஆறு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு ஜன., வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பயணிகளிடமுள்ள அதிக வரவேற்பால் பெட்டிகள் குறைக்கப்படாமல் பிப்., 20 வரை தற்காலிகமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, தென்காசி மாவட்ட மக்கள் தினசரி அதிகமாக இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். எனவே ரயிலை நிரந்தரமாக 23 பெட்டிகளுடன் இணைத்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
15-Jan-2025