டூவீலர் பார்க்கிங்காக மாறிய சிவகாசி பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் அவதி
சிவகாசி: டூவீலர் நிறுத்தும் இடமாக சிவகாசி பஸ் ஸ்டாண்ட் மாறியதால் பஸ்கள் வருவதற்கு சிரமம் ஏற்படுவதோடு பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 300 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. சாத்துார், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும் பல்வேறு பணி நிமித்தமாக தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிடம், பயணிகள் காத்திருக்கும் இடம் என அனைத்து பகுதிகளும் டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே டூவீலர் நிறுத்துவதற்கான காப்பகம் இருந்தும் ஒரு சிலர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தங்கள் டூவீலர்களை நிறுத்திவிட்டு பஸ் ஏறி சென்று விடுகின்றனர்.ஏற்கனவே இட நெருக்கடியால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகின்ற நிலையில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதுமே டூவீலர்களை நிறுத்துவதால் மேலும் சிரமம் ஏற்படுகின்றது. நுழைவுப் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பஸ்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. பயணிகள் பஸ் ஏறுவதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.