முடங்கியதா சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை திட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் 250 கோழிக்குஞ்சுகள் வழங்கும் சிறிய அளவிலான நாட்டுக் கோழி பண்ணை திட்டம் வந்த முதல் ஆண்டோடு முடங்கியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழக அரசால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக் கோழி பண்ணை திட்டம் 2023-24ம் நிதியாண்டிற்கு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625ஐ அரசு வழங்கும். ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுடைய 250 கோழிகளை வழங்கும். ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு என இந்த 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.இதே போல் விதவைகளுக்கு 40 நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம், ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் வகையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இந்த சிறிய அளவிலான நாட்டுக் கோழி பண்ணை திட்டமும், விதவைகளுக்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டமும் வந்த முதல் ஆண்டோடு நின்று விட்டது.விருதுநகர் மாவட்டத்தில் சிறு விவசாயிகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு இது போன்ற திட்டங்கள் உதவி வந்தன. 2023-24ல் செயல்படுத்திய போது 3 பேர் பயனடைந்தனர். தற்போது இத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் சிறு விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.மாவட்டத்திலுள்ள 450 ஊராட்சிகளிலும் இது போன்ற கால்நடை திட்டங்களை விவசாயிகள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் செயல்படுத்திய திட்டம் தொடராமல் இருப்பது அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்புடுத்தி உள்ளது.கால்நடைத்துறையினர் கூறுகையில், “அரசுக்கு எழுதி அனுப்பி உள்ளோம். விரைவில் அறிவிக்கப்பட்டால் திட்டத்தை செயல்படுத்த காத்திருக்கிறோம்,” என்றனர்.