சாத்துார் - ஏழாயிரம் பண்ணை ரோட்டில் வேகத்தடைகளால் விபத்து அபாயம்
சாத்துார்; சாத்துார் ஏழாயிரம் பண்ணை ரோட்டில் உள்ள வேகத்தடைகளால் விபத்து அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சாத்துார் ஏழாயிரம் பண்ணை ரோட்டில் ஒ. மேட்டுப்பட்டி இந்திரா காலனி, மெயின்ரோடு மற்றும் ஒத்தையால் விலக்கு, சூரங்குடி விலக்கு, இ.மேட்டுர், பழைய ஏழாயிரம் பண்ணை கங்கரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன.இந்த வேகத்தடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு இரவு நேரத்தில் இவ் வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்களுக்கு தெரிவதில்லை. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வேகமாக சென்று தடைகளால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. வேகத்தடை இருப்பதற்கு அடையாளமாக நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.மேலும் வேகத்தடைகள் மீது சிகப்பு மஞ்சள் ஒலிப்பான்களும் வெள்ளை கோடுகளும் அடிக்கப்படவில்லை.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் உரிய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.