உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் வனவிலங்கு வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு அவசியமாகிறது தீவிர கண்காணிப்பு

ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் வனவிலங்கு வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு அவசியமாகிறது தீவிர கண்காணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதை தடுக்க போலீஸ், வனத்துறையினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்.விருதுநகர் மாவட்டம் தேவதானத்தில் இருந்து மதுரை மாவட்டம் சாப்டூர் வரை உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளை கொண்டது ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம். இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன.இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் ஆகிய நான்கு வனச்சரக பகுதிகளிலும் அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாகவே நீடிக்கிறது.வனக்குற்றங்கள் தொடர்பாக ஒவ்வொரு வனச்சரகத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான வனவிலங்குகள் வேட்டை சம்பவத்தில் பிடிபடுபவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையில் போதிய அளவிற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததால் 480 ச.கி.மீ., பரப்பு மலைப்பகுதியை வனத்துறையினரால் தீவிரமாக கண்காணிக்க முடியவில்லை.அதேநேரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியை நோக்கி செல்லும் ரோடுகளில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க போதிய போலீசாரும் இல்லை.இதனால் மாலை 6:00 மணிக்கு மேல் சமூக விரோதிகள் மலையடிவாரப் பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதற்காக நாட்டு வெடிகுண்டுகளையும் தயாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆட்டு வலசல் பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதனை தயாரித்ததாக மம்சாபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், முனியசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டது தெரிந்தது. இதுபோல் ராஜபாளையம், வத்திராயிருப்பு வனச்சரக பகுதிகளிலும், கடந்த காலங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பிடிபட்டுள்ளன.வன குற்றங்களை தடுக்க வனத்துறையிலும், போலீஸ்துறையிலும் போதிய அளவிற்கு போலீசார், வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லை. இதனை சமூக விரோதிகள் எளிதாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.எனவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறை, உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசார், க்யூ பிரிவு போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதற்கு கூடுதலாக வேட்டை தடுப்பு காவலர்கள், போலீசார் நியமிக்க மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ