உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேங்கும் தண்ணீர், சுகாதாரக்கேடு, ஆக்கிரமிப்பு; ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

தேங்கும் தண்ணீர், சுகாதாரக்கேடு, ஆக்கிரமிப்பு; ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் மழை பெய்தால் தேங்கும் தண்ணீர், சுகாதாரக் கேடு, துர்நாற்றம், ஆக்கிரமிப்பு, அடிக்கடி மூடப்படும் கட்டணமில்லா சுகாதார வளாகம், போஸ்டர் ஒட்டும் பெட்டியாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை, போதிய இருக்கை வசதியின்றி சிரமம் போன்ற குறைபாடுகளால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியில் உள்ள கழிவு நீர் வாறுகால்கள் அடைபட்டு கிடப்பதால் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நோய் பரப்பி வருகிறது.பலமுறை புனரமைத்தும் கட்டணமில்லா கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி மூடப்படுவதாலும், கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாலும் பலர் திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு, துர்நாற்றம், கொசுத்தொல்லை காணப்படுகிறது.தாய்மார்கள் பாலூட்டும் அறையில் போஸ்டர்கள் ஒட்டுப்பட்டு, பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால் அதனை பயன்படுத்த பெண்கள் தயங்குகின்றனர். கடைகளின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு காணப்படுகிறது.பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதியில் பஸ்கள் நிறுத்தக்கூடிய ரேக்குகளில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. குடிநீர் தொட்டிகளை சுற்றி சுத்தமில்லாததால் சுகாதாரக்கேடு, கொசு தொல்லை காணப்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் மேற்கு, தெற்கு பகுதிகளில் மக்கள் நிற்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் நின்று கொண்டே இருக்க வேண்டி உள்ளது.சிவகாசி பஸ்கள் நிற்கும் பகுதியில் கடைகளில் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.பஸ் ஸ்டாண்டின் வடமேற்கு பகுதியில் உள்ள மாடிப்படி இரவு நேரங்களில் மது அருந்தும் பாராக மாறி வருகிறது.

அடைபட்ட வாறுகால்கள்

-பாண்டியராஜ், சமூக ஆர்வலர்: பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் உள்ள வாறுகால்கள் அடைபட்டு கிடப்பதால் சிறிய சாரல் மழை பெய்தால் கூட கழிவுகள் கலந்த தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தண்ணீர் தேங்காத வகையில் வாறுகால்களில் உள்ள கழிவுகளை முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும். தாய்மார்கள் பாலூட்டும் அறையை சுற்றி சுகாதாரக்கேடு காணப்படுகிறது. இதனை இடமாற்றம் செய்ய வேண்டும்.

சுகாதாரக் கேடு

மூர்த்தி, இ.கம்யூ., செயலாளர்: மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் கொசுத்தொல்லை, துர்நாற்றம், சுகாதாரக் கேடு காணப்படுகிறது. கட்டணமில்லா கழிப்பிடம் அடிக்கடி பழுதடைந்து மூடப்படுவதால் பயணிகள் கட்டணக் கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பஸ் ஸ்டாண்ட் உட்புறத்தில் உள்ள சுகாதாரக் கேடுகளை முழு அளவில் சுத்தம் செய்து கொசு தொல்லை இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

-ரவிக்கண்ணன், நகராட்சி தலைவர்: பஸ் ஸ்டாண்டில் தினமும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. கழிவுகள் அகற்றப்படுகிறது. கட்டணமில்லா கழிப்பிடத்தை அடிக்கடி சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் சுட்டிக் காட்டும் குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படுகிறது.

தீர்வு

மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியை தினமும் பலமுறை தூய்மைப்பணி மேற்கொண்டு கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். கடை கழிவுகள் பஸ் ஸ்டாண்டிற்குள் கொட்டும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணமில்லா கழிப்பிடம் பராமரிக்க வேண்டும்.உட்பகுதி ஆக்கிரப்புகளை அகற்றி பயணிகள் அமர இருக்கை வசதி செய்து தர வேண்டும். கழிப்பிடம் அருகேவுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை பஸ் ஸ்டாண்டின் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை