உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக ஸ்டாலின் கூறுவது பச்சை பொய் ராஜபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்

லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக ஸ்டாலின் கூறுவது பச்சை பொய் ராஜபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி காட்டம்

ராஜபாளையம்:புதிய தொழில்கள் துவங்கி லட்சம் பேருக்கு வேலை கிடைத்ததாக ஸ்டாலின் கூறுவது பச்சை பொய் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுபயணத்தில் நேற்று மாலை ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: ஸ்டாலின் தங்கள் கூட்டணி வலுவானது எனக் கூறி வருகிறார். உங்களுக்கு கூட்டணி வலிமை. எங்களுக்கு மக்கள் வலிமை. 50 மாத கால தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. எங்கள் ஆட்சியை தி.மு.க.,வினரால் விமர்சனம் செய்ய முடியவில்லை. தி.மு.க.,விற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதுகம்யூனிஸ்ட். சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்ட் தி.மு.க.,வை எதிர்த்து பேசுவதில்லை. தி.மு.க., கூட்டணி தலைவர்கள் என்ன பேச வேண்டும் என ஸ்டாலின் அனுமதி பெற்று பேசுகின்றனர். முத்தரசன் எங்களுக்கு என்ன கொள்கை என கேட்கிறார். உங்களிடம் கொள்கை இல்லாததால் மக்கள் செல்வாக்கை இழந்துள்ளீர்கள். அரசு ஊழியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புகார் கொடுக்கச் சென்றபோது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அவர்கள் தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள். தி.மு.க.,வின் தவறுகளை கம்யூனிஸ்கள் சுமக்க வேண்டாம். அவர்கள் மீது மரியாதை இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். புதிய தொழில்கள் தொடங்கி லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ஸ்டாலின் கூறுவது பச்சை பொய். தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை வெளியிடவில்லை. சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 50,000 அரசு ஊழியர்கள் நியக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் 75 ஆயிரம் பேர் தற்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 5.75 லட்சமாக உயர்ந்துள்ளது.நிதி மேலாண்மை என கூறி நிபுணர்கள் குழு அமைத்து அலசி ஆராய்ந்து ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ. ஒரு லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர். தமிழக மக்களை கடனாளிகளாக மாற்றியதே தி.மு.க. அரசின் சாதனை. கொரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை காப்பாற்றியது அ.தி.மு.க., ஆட்சி. தினசரி 7 லட்சம் பேருக்கு இலவச உணவு அளித்து பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கி மாணவர்களையும் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !