தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதி?
ஸ்ரீவில்லிபுத்துார்:தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செப்., 26ல் சென்றது. மாலை, 6:50 மணிக்கு கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்றபோது தண்டவாளத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.ரயில்வே போலீஸ் சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்ததில், சம்பவ பகுதி அருகே ஒரு குவாரியில் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பல்சிங் பகேல், 21, ஈஸ்வர் மைடியர், 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் கல் வைத்து வீடியோ எடுத்து பின்னர் அதை அழித்தது தெரிய வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் போகநல்லுார் என்ற இடத்தில் மீண்டும் 10 கிலோ எடை கொண்ட ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.இதைப் பார்த்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி, கல்லை அப்புறப்படுத்தி மீண்டும் ரயிலை இயக்கினார். ரயில்வே அதிகாரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.ரயில்வே அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினர். நேற்று சம்பவ பகுதி முழுதும் ஆய்வு செய்து, சுற்றியுள்ள கிராமங்களில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரித்தனர்.