மழைக்காலங்களில் மாணவர்கள் குவாரியில் குளிக்க செல்வதால் ஆபத்து
சிவகாசி: மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது, கண்மாய், குவாரிகளில் விபரீதம் அறியாமல் மீன்பிடிக்கவும், குளிக்கவும் செல்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர். மாவட்டம் முழுவதுமே நகர், கிராம பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், கண்மாய்கள், ஊருணி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருகின்றது. இன்னும் பருவமழை பெய்ய உள்ள நிலையில் கண்மாய் போன்ற நீர் நிலைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்தவுடன் மீன்பிடிக்க, குளிக்க மாணவர்கள் ஆர்வமாக கிளம்பி விடுவார்கள். இவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் இதுபோன்று நீர்நிலைகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கு விளையாட்டுத்தனமாக குளிக்க மீன்பிடிக்க என உற்சாகமாக இருக்கின்றனர். அதே சமயத்தில் நீர் நிலைகளில் ஆழம் இவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீச்சலும் தெரிவதில்லை. இதனால் தப்பித்தவறி நீர் நிலைகளில் விழுபவர்கள் நீச்சல் தெரியாமல் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த மழை சீசனில் இதுபோன்று நீர் நிலைகளுக்கு சென்று பள்ளி மாணவர்கள் இறந்துள்ளனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு பெற்றோர் தங்களது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். விளையாட்டுத்தனமாக செய்யும் செயலால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஒத்துழைப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.