சுழற்சி முறையில் பயிர் செய்ய கோடை உழவு நல்லது: விவசாயிகளுக்கு தேவை விழிப்புணர்வு
மாவட்டத்தில் அதிக அளவில் மானாவாரி விவசாயங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக பருத்தி, கடலை, எள், சோளம், துவரை, கம்பு, கேப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு, விளை நிலங்கள் வெயிலில் காய்ந்து கிடக்கின்றன.கோடை காலத்தில் விளைநிலங்களில் கோடை உழவு செய்வது நல்லது. 'சித்திரை உழவு; பத்தரை மாற்று தங்கம்' என்பது முன்னோர்களின் கருத்து. ஆழமாக கோடை உழவு செய்யும் போது, அறுவடை செய்யப்பட்ட பயிர்களின் துார் பகுதி, சருகுகள் மண்ணுக்குள் புதைந்து மக்கி உரமாகும்.நிலத்தில் உள்ள பூஞ்சைகள், தீமை செய்யும் புழுக்கள் வெளியேறி பறவைகளுக்கு இறையாகும். இல்லாவிட்டால் வெயிலுக்கு காய்ந்து அழிந்துவிடும். கோடை மழை பெய்யும் போது, மழை நீர் தேங்கி, ஆழமாக மண்ணுக்குள் உட்புகுந்து, ஈரப்பதத்துடன் காற்று புகுந்து, எப்போதும் இலகுவாக இருக்கும். பயிரிடும் போது ஈரப்பதம் கிடைத்து, பயிர்கள் செழிப்பாக வளரும்.அதே சமயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்வது நல்லது. கோடை உழவு செய்த பின், தோட்ட வகை பயிர்களான கத்தரி, மிளகாய், வெண்டை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யலாம். சுழற்சி முறையில் பயிரிட்டால், மண்ணில் உள்ள சத்துக்கள் குறையாமல் பாதுகாக்கப்படும்.மேலும் கோடை உழவு அடுத்த சாகுபடிக்கான உரத் தேவையை குறைத்து, நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சி தொல்லையை நீக்கும். களைகளை கட்டுப்படுத்தும். மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, கூடுதல் மகசூல் பெறலாம். கோடை உழவு செய்யாத நிலங்களில் மண் அரிமாணம் ஏற்படும். மண்ணில் உள்ள ஊட்டங்கள் விரயமாகும். கேழ்வரகு, குதிரைவாலி போன்ற பயிர் வகைகள் கோடை காலத்திற்கு ஏற்ற பயிர்களாக உள்ளன.சுழற்சி முறையில் பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகள் முன் வர வேண்டும். அதற்கு தேவையான ஆலோசனைகளை வேளாண் அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது.