எஸ்.கல்விமடையில் கோயில் திருப்பணி துவக்கம்
நரிக்குடி: நரிக்குடி எஸ்.கல்விமடையில் பழமையான கோயிலில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. நரிக்குடி எஸ்.கல்விமடையில் 1500 ஆண்டுகள் பழமையான, இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட, திருநாகேஸ்வரமுடையார், திருநாகேஸ்வரி தாயார் கோயில் உள்ளது. இங்கு கட்டடங்கள், சிலைகள், சேதமடைந்த நிலையில் உள்ளது. இக்கோயில் திருப்பணிக்காக அரசு சார்பில் ரூ. 2 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 மாதங்களுக்கு முன் சிலைகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது ராஜா உருவங்கள் பதித்த தங்க தகடுகள் கண்டுஎடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஞானாசிரியர் தியாகராஜன் தலைமையில் தமிழ் வழியில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை, திருப்பணி துவக்க விழா நடந்தது. திருநாகேஸ்வரமுடையாருக்கு பிரதிஷ்டை செய்யும் இடத்தில் கலசாபிஷேகம் நடந்தது. நவரத்தினங்கள், ஐம்பொன்னால் ஆன காசுகள், தங்க நாணயங்கள் வைக்கப்பட்டு திருப்பணி பூஜை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.