பஸ் படியில் நின்று பயணித்த மாணவர்களை மேலே ஏற சொன்னதால் வாக்குவாதம் பஸ்சை இயக்க மறுத்த டிரைவர்
காரியாபட்டி: பஸ் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே ஏறி வரச் சொல்லியும், ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓரமாக நிறுத்தி டிரைவர் ஓட்ட மறுத்ததால் வேறு வழியின்றி ஏறினர். காரியாபட்டியில் இருந்து ஏராளமானவர்கள் அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கின்றனர். தினமும் காலை 8 :00மணிக்கு புறப்படும் அரசு டவுன் பஸ்சில், பெரும்பாலானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். நேற்று காலை 8:00 மணிக்கு காரியாபட்டியில் இருந்த புறப்பட்ட பஸ்சில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏறி படியில் நின்று பயணம் செய்தனர். மற்றவர்கள் ஏறி, இறங்க இடையூறு ஏற்படுத்தினர். இதனை அறிந்த கண்டக்டர் மேலே ஏறி வர அறிவுறுத்தினார். யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் கல்குறிச்சியில் நிறுத்தி படியில் நிற்காமல் மேலே ஏறினால் தான் பஸ் இயக்குவேன். இல்லையென்றால் போலீசுக்கு தகவல் தெரிவிப்பேன் என தெரிவித்தார்.இதையடுத்து டிரைவர், கண்டக்டருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மற்ற பயணிகள் மாணவர்களை சத்தம் போட்டதால், வேறு வழி இன்றி மேலே ஏறினர். 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காலை, மாலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.