உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுதுக்கு என்று தான் தீர்வோ

ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுதுக்கு என்று தான் தீர்வோ

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியின் குடிநீர் உள்ளூர் ஆதாரமான ஆனைக்குட்டம் ஷட்டர் பழுதால் தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. கனமழை நேரத்தில் எவ்வளவு மழைநீர் தேங்கினாலும் அது உடனடியாக வெளியேறி விடுகிறது. இதனால் அணையின் தேக்கும் திறன் குறைந்து விட்டது.மாவட்டத்தில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, வெம்பக்கோட்டை கோல்வார்பட்டி, ஆனைக்குட்டம், குல்லுார்சந்தை, இருக்கன்குடி, சாஸ்தா கோவில் என 8 அணைகள் உள்ளன.இதில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, சாஸ்தா கோவில் அணைகள் ஆண்டு தோறும் பாசன பயன்பாட்டிற்காக திறந்து விடப்படுகின்றன. மற்ற அணைகள் நிரம்புவதும், நிரம்பினாலும் பாசனத்திற்கு பயன்படுத்துவது அரிதாக தான் உள்ளது. குல்லுார்சந்தை அணை மீன் பிடிக்கவும், கோல்வார்பட்டி அணை விவசாயத்திற்கும், வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் அணைகள் குடிநீர் பயன்பாட்டிற்கும் பயன்படுகின்றன. அதன் படி சிவகாசியில் அமைந்துள்ள ஆனைக்குட்டம் அணையில் வடகிழக்கு மழை துவங்கும் முன் வரை அணை வறண்டு தான் இருந்தது.ஆனைக்குட்டம் அணையில் கடந்த டிச.ல் பெய்த அதீத கனமழை காரணமாக நீர் நிரம்பியது. ஆனால் சில நாட்களிலே அணையில் இருந்து நீர் வெளியேறியது.இந்தாண்டும் மழை பெய்தாலும் கோடை காலம் வரை கூட தற்போதுள்ள நீர் தங்காது. இந்த நீரில் உப்பு கரிக்கும் தன்மை உள்ளதால் ஆய்வக சோதனைக்கு உட்படுத்தி பயன்படுத்த வேண்டும் என விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்நிலையில் நாளுக்கு நாள் குடிநீர் குறைந்து வருவது நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அணையில் உள்ள மழைமானியும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அணையில் போதிய ஊழியர்கள் இல்லை. 15 ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.ஷட்டர் பழுதால் வெளியேறும் நீர், கோரைப்புற்கள் கருவேலங்களால் திசை தெரியாது மாயமாகி விடுகின்றன. இந்த அணையின் பிரச்னைக்கு என்று தான் தீர்வு ஏற்படுமோ என மக்கள் தவிக்கின்றனர்.கடந்த ஆண்டு சென்னையில் இருந்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிதி ஒதுக்கப்பட்டும் தற்போது வரை சரி செய்யப்படவில்லை. பணிகளை விரைந்து துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை