மேலும் செய்திகள்
6 மாதமாக குடிநீர் சப்ளை பாதிப்பு
21-Nov-2024
காரியாபட்டி: காரியாபட்டி சொக்கனேந்தல் கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லாததால் கண்மாய் நீரை பயன்படுத்தும் கொடுமை உள்ளதால், மக்கள் தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். காரியாபட்டி சொக்கனேந்தல் கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. சுவையான தண்ணீராக இருப்பதால் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சென்ற ஒரு மாதமாக மோட்டார் பழுதால் குடிநீர் சப்ளை இல்லை. ஆனால் இதுவரை பழுதை சரி செய்ய உள்ளாட்சி நிர்வாகத்தினர் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கண்மாய் தண்ணீரை சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக மோட்டார் பழுதை நீக்கி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முத்துராஜ், சொக்கனேந்தல்: ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. குடிநீரை விலைக்கு வாங்கியாவது பயன்படுத்தலாம் என குடிநீர் வண்டியை எதிர்பார்த்து காத்திருப்போம். வண்டியும் சரிவர வருவது கிடையாது. எப்போதாவது வரும் குடிநீர் வண்டியில் குடங்களில் தண்ணீர் பிடித்தால் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். மற்ற நேரங்களில் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று கிணறுகளில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகிறோம். வயதானவர்கள் கண்மாய் நீரை வடிகட்டி பயன்படுத்தி வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளது. அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
21-Nov-2024