சிவகாசி தட்டாவூரணியில் குழாய் இருக்கு; குடிநீர் இல்லை
சிவகாசி : சிவகாசி தட்டாவூரணி பகுதியில் குழாய் பதிக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு தட்டாவூரணி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியம் கட்டப்பட்டது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அதே சமயத்தில் சமீபத்தில் குழாய் வழியாக உப்பு தண்ணீர் மட்டும் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டது. குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் மாநகராட்சி வாகனம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தத் தண்ணீர் அனைவருக்கும் போதவில்லை. குடிநீர் வாகனம் வரும் போதெல்லாம் சண்டை சச்சரவு ஏற்படுகின்றது. மேலும் குடிநீரும் பற்றாக்குறையாக இருப்பதால் இப்பகுதியினர் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகின்றனர். எனவே மாநகராட்சி சார்பில் குழாய் மூலமாக சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.