உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வ.புதுப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு விசிட்

வ.புதுப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு விசிட்

வத்திராயிருப்பு : குடிநீர் பற்றாக்குறை, தூய்மை பணியில் தாமதம், ஆண்கள் சுகாதார வளாகம் இன்றி அவதி போன்ற குறைகளுடன் வசித்து வருகின்றனர் வ. புதுப்பட்டி பேரூராட்சி 8வது வார்டு மக்கள்.ப பாலசுப்பிரமணியம் கோவில் முதல் தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு தெரு மண் ரோடாக காணப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு வருகிறது.உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மையுடன் காணப்படுவதால் தங்கள் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுவது போதுமானதாக இல்லை.தினசரி தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கொசு தொல்லை காணப்படுகிறது. ஆண்களுக்கு சுகாதார வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது. மேலும் பொது பயன்பாட்டிற்கு என ஒரு குளியல் தொட்டி அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தேவை தாமிரபரணி தண்ணீர்

-பேச்சியம்மாள், குடியிருப்பாளர்: தற்போது வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. சற்று உவர்ப்பு தன்மையுடன் காணப்பட்டாலும் அதனைத் தான் பயன்படுத்தி வருகிறோம். எனவே, தாமிரபரணி தண்ணீர் வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை

கொன்னையாண்டி, வார்டு உறுப்பினர்: வார்டில் அடிக்கடி தூய்மை பணி மேற்கொள்ளவும், தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யவும், பாலசுப்பிரமணியம் கோவில் தெருவின் விடுபட்ட பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கவும், ஆண்களுக்கு சுகாதார வளாகம் மற்றும் குளியல் தொட்டி கட்டவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை தெரிவித்துள்ளேன்.

-நடவடிக்கை எடுக்கப்படும்

சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: வார்டு உறுப்பினர் மற்றும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி