விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 97.45 சதவீதம் தேர்ச்சி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி அடைந்து மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது. கடந்த முறை 6ம் இடம் பெற்ற நிலையில் தற்போது முன்னேறியுள்ளது.மாவட்டத்தில் 2025 ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாவட்டத்தில் உள்ள 349 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 683 மாணவர்கள், 12 ஆயிரத்து 461 மாணவிகள் என 24 ஆயிரத்து 144 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 216 மாணவர்கள், 12 ஆயிரத்து 313 மாணவிகள் என 23 ஆயிரத்து 529 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் 2022 கல்வியாண்டில் 95.96 சதவீதம் தேர்ச்சி பெற்று 3ம் இடம் பிடித்திருந்தது. 2023ல் 96.22 சதவீதம் தேர்ச்சி அடைந்து அதே இடத்தை தக்க வைத்திருந்தது. 2024ல் 1.08 சதவீதம் குறைந்து 95.14 சதவீதம் எடுத்து மாநில அளவில் 6வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தது ஒரு காரணமாக கூறப்பட்டது. முதலிட தரங்களை விட பல மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இந்தாண்டு 97.45 சதவீதம் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்துள்ளது.அரசுப்பள்ளிகள் 75, உதவி பெறும் பள்ளிகள் 41, தனியார் பள்ளிகள் 63 என மொத்தமாக 179 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஆங்கில பாடத்தில் 6 மாணவர்கள், கணிதத்தில் 34 மாணவர்கள், அறிவியலில் 307, சமூக அறிவியலில் 131 என 478 மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர்.6வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு தேர்ச்சி சதவீதம் முன்னேறியது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகளில் இடைநின்ற பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடையாததால் முதலிட வாய்ப்புகள் குறைந்து விட்டது.இந்தாண்டு இடைநின்ற மாணவர்களை துவக்கத்தில் இருந்து கண்டறிந்து முழுமையான பயிற்சி வழங்கப்பட்டதுடன், தொடர்ச்சியான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டதால் மாணவர்கள் தேர்வை எளிதாக எதிர்கொண்டு மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டது.