பயன்படாத சுகாதார வளாகங்கள், துார்வாரப்படாத ஓடைகள் தவிப்பில் விருதுநகர் பாவாலி ஊராட்சி
விருதுநகர்: விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் பயன்படாத சுகாதார வளாகங்கள், புதர்மண்டிய மகளிர் குழு கட்டடம், துார்வாரப்படாத வரத்து ஓடைகள், கண்மாய்கள் என மக்கள் பரிதவிக்கின்றனர்.விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர், கலைஞர் நகர் மேற்கு, கிழக்கு, பராசக்தி நகர், சங்கரநாராயணபுரம், பாவாலி சந்திரகிரிபுரம், சொக்கலிங்கபுரம், சீனியாபுரம், எல்கைப்பட்டி, ஆனைக்குழாய் மேற்கு ஆகிய பகுதிகள் அடங்கும்.இங்கு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக இருந்த சீனியாபுரம், பாவாலி கண்மாய்கள் துார்வாரப்படாமல் உள்ளன. கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. பாவாலி கண்மாய் வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. மடைகள் பராமரிப்பு இல்லை. ஊராட்சி ஒன்றியம் சார்பில் மடைகளை பலப்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.வரத்து கால்வாய்களை ஜே.சி.பி.,யை கொண்டு சரி செய்ய வேண்டும். காலனி, அருந்ததியர் குடியிருப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. சந்திரகிரிபுரம் ரோட்டில் மக்கள் திறந்தவெளியாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. காளியம்மன் கோயில் அருகே சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.பாவாலி ஊராட்சியின் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் துார்வாரப்படாமல் உள்ளது. மகளிர் குழு கட்டடம் புல் முளைத்து பயன்பாடின்றி கிடக்கிறது. அடிகுழாய்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. வாறுகாலில் கழிவுநீர் செல்ல வழியில்லை. காமாட்சி நகரில் உள்ள ஊருணி நாணல், சம்பை புற்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளன.ரோட்டின் ஓரங்களில் மழைநீர் தேங்குகிறது. மின்கம்பங்கள் பலவீனமாக உள்ளது. அய்யனார் நகரில் ரோடு வசதி இல்லை. திறந்தவெளியாக பயன்படுத்தப்படுகிறது. கவுசிகாநதிக்கு தடுப்பணை கட்ட வேண்டும். இதன் மூலம் பாவாலி ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வாறுகால் வசதி வேண்டும்
கிருஷ்ணா, விவசாயி: கண்மாய்கள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளன. இவற்றை துார்வாரினால் பாவாலியில் விவசாயம் செழிக்கும். தற்போது விவசாயம் கேள்விக்குறியாக தான் உள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ரோடு, வாறுகால் தேவையாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி அதிகரிப்பு
முனியாண்டி, விவசாயி: கவுசிகா நதியில் தடுப்பணை அமைத்தால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் அதிகரிக்கும். விவசாயத்திற்கும் உதவியாக இருக்கும். மேலும் எங்கள் ஊரில் அதிகரித்து வரும் திறந்தவெளி கழிப்பிடத்தை கட்டுப்படுத்த பயன்பாட்டில் இல்லாத கழிப்பிடங்களை செயல்படுத்தவும், தேவைப்படும் இடங்களில் புதிய கழிப்பிடங்கள் கட்டவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதர்மண்டிய மடைகள்
ராஜேந்திரன், விவசாயி: பாவாலி கண்மாயின் மடைகள் சிதிலமடைந்து புதர்மண்டி கிடக்கிறது. கலுங்கு ஓடையை துார்வாரவில்லை. கண்மாய் ஆங்காங்கே மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் நீர் சேகரமாவதில்லை. ஊராட்சியில் வாறுகால்கள் பல இடங்களில் தேவையாக உள்ளது. அதை முழுமைப்படுத்த வேண்டும்.