| ADDED : செப் 25, 2011 10:01 PM
விருதுநகர்:நூல் விலை உயர்வு காரணமாக சத்திரப்பட்டியில் பேண்டேஜ் துணி
உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியில்
உற்பத்தியாகும் பேண்டேஜ் துணி உற்பத்தி இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் 75 க்கும் மேற்பட்ட
நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த தொழிலில் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் 10, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி
வருகின்றனர். பேண்டேஜ் உற்பத்திக்கு முக்கிய தேவையான 40 ம் நம்பர் நூல் 50
கிலோ கொண்ட மூடை ஒன்றுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம்
முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை சிறிது,
சிறிதாக கூடி உச்ச கட்டமாக ரூ. 11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.
தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் மத்திய அரசு வெளி நாடுகளுக்கு பஞ்சு
ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக நூல் விலை கட்டுப்படுத்தப்பட்டு
மூன்று மாதங்களுக்கு முன் 7 ஆயிரம் ரூபாயாக குறைந்திருந்தது. கடந்த பத்து
நாட்களாக மீண்டும் நூல் விலை அதிகரித்து ரூ.8 ஆயிரத்து 200 வரை விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. நூல் விலை நிலையில்லாமல் குறைவதும், கூடுவதுமாக
இருப்பதால், முன் கூட்டியே ஆர்டர் எடுத்த உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயம்
செய்திருப்பார்கள். தற்போது நூல் விலையை காரணம் காட்டி பேண்டேஜ் துணியின்
விற்பனை விலையை அதிகரிக்க முடியாத நிலை இருப்பதால் உற்பத்தியாளர்கள்
பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய்
மதிப்பிலான பேண்டேஜ் துணி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி நிலையான
விலையில் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.