| ADDED : ஆக 17, 2011 12:09 AM
விருதுநகர் : நில நீர் செறிவூட்டும் திட்டத்தில் நபார்டு வங்கி மூலம்
மானியம் பெற்ற விவசாயிகள் 15 நாட்களுக்குள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த
வேண்டும்.தவறும் விவசாயிகளிடம் தொகையை திரும்ப வசூலிக்க முடிவு.விருதுநகர்
மாவட்டத்தில் நில நீர் செறிவூட்டும் திட்டம் சிவகாசி, ராஜபாளையம்,
வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.பாசன கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்து நபார்டு வங்கி மானியமாக தலா ரூ. 4
ஆயிரம் வழங்கி வருகிறது. மானியம் பெற்ற விவசாயிகள் பலர் இந்த மழை நீர்
சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவில்லை. சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு
மாவட்ட நிர்வாகம் 15 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதற்கு பின்னர்
சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் மானியத்தொகை திருப்பி வசூலிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறுகையில்,''பாசன கிணறுகளில்
மழை நீர் சேமிப்புக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தொகை வேளாண்
அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. முறையாக செயல்படுத்தாதற்கு
காரணமான வேளாண் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்,''
என்றார்.