வீணாகும் மின் மயானம், மேடான வாறுகால்
காரியாபட்டி : இலவசமாக செயல்பட்டு வந்த கழிப்பறை புதுப்பிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுவது, வாறுகால் மேடாக உயர்த்தி கட்டியதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி, ரோட்டில் ஓடுவது, டெண்டர் எடுக்க முன் வராததால், வீணாகி வரும் மின் மயானம் உள்ளிட்ட பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர். மல்லாங்கிணர் பேரூராட்சியில் ரூ. பல லட்சம் செலவில் 2 ஆண்டுகளுக்கு முன் மின் மயானம் அமைக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது கட்டடம் சேதமடைந்து வருகிறது. பல லட்சம் செலவு செய்தும் வீணாகி வருகிறது. நாகமலை தெருக்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வாறுகால் அமைக்கப்பட்டது. வாறுகால் மேடாக அமைக்கப்பட்டதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி வீதிகளில் ஓடுகிறது.துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. மல்லாங்கிணரில் 18க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டன. பெரும்பாலானவைகள் செயல்பாட்டில் இல்லை. தற்போது பஜாரில் இலவசமாக செயல்பட்டு வந்த கழிப்பறை புதுப்பிக்கப்பட்டது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால் பயன்படுத்த முடியாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர். கட்டியும் பலனில்லை
மில்லன், தனியார் ஊழியர்: ரூ. பல லட்சம் செலவில் மின் மயானம் கட்டப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. பொதுவாக எரியூட்ட டெண்டர் விடப்படுவது நடைமுறையில் உள்ளது. ரூ.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட மின் மயானம் வீணாகி வருகிறது. பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். கட்டணத்தால் பாதிப்பு
ஆரோக்கியம், தனியார் ஊழியர்: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டன. அனைத்தும் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வந்தன. மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் சேதமடைந்து, பெரும்பாலான கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பஜாரில் உள்ள கழிப்பறையை மறு சீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இலவச கழிப்பறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடான வாறுகால்
பால்பாண்டி, தனியார் ஊழியர்: நாகமலை வீதிகளில் கழிவு நீர் செல்ல வாறுகால் அமைக்கப்பட்டது. மேடாக அமைக்கப்பட்டதால் கழிவுநீர் செல்ல வழி இல்லை. ரோட்டில் தேங்குகிறது. அசுத்தமாக கிடப்பதால் அருவருப்பாக உள்ளது. கழிவுநீர் எளிதில் செல்லும் வகையில், வாறுகாலை தாழ்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.