உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம்

 வெம்பக்கோட்டை அணையில் குறையும் நீர்மட்டம்

சிவகாசி: வெம்பக்கோட்டை அணை முழுமையாக நிரம்பிய நிலையில் ஷட்டர் பழுதாகி தண்ணீர் வீணாக வெளியேறி தண்ணீர் மட்டும் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம், சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டர் பாசன வசதி உடையது. இதனை நம்பி நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுகின்றனர். மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. கடந்த மழை சீசனில் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. 2024 பிப்.,ல் அணையில் 20 அடி உயரம் வரை தண்ணீர் இருந்த நிலையில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வெளியேறி ஜூனில் 15 அடியாக குறைந்தது. ஷட்டர் பழுதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிய நிலையில் அக். ல் நீர்மட்டம் 9.5 அடி தான் இருந்தது. இந்நிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் பரவலாக மழை பெய்து தண்ணீர் வந்து அணை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதே சமயத்தில் முதல் மதகில் ஷட்டர் பழுதால் தண்ணீர் தொடர்ந்து வீணாகி வெளியேறி 18 அடியாக குறைந்துவிட்டது. தற்போது இப்பகுதியில் மக்காச்சோளம், நெல் பயிரிட்டுள்ளனர். விவசாயத்திற்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பல ஆண்டுகளாக இதே நிலை நீடித்தும் ஷட்டர் பழுதை சரி பார்க்கவில்லை. எனவே வருங்காலத்திலாவது ஷட்டரை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை