அரசு மருத்துவக் கல்லுாரியில் தண்ணீர் பற்றாக்குறை அரசின் வரிப்பணம் வீணாகும் நிலை தொடருது
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் உள்ள பேராசிரியர்கள், பணியாளர்களுக்கான 60 குடியிருப்புகள் தண்ணீர் பற்றாக்குறையால் 4 ஆண்டுகளாக காலியாக உள்ளது. அரசின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஆட்கள் இன்றி பாழாகும் நிலை தொடர்கிறது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்களுக்காக 60 குடியிருப்புகள் கட்டப்பட்டது. கூரைக்குண்டு ஊராட்சியில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்கும், மருத்துவக்கல்லுாரிக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.அரசு மருத்துவக்கல்லுாரி, மாணவர்கள் விடுதி, டீன் குடியிருப்பு, பேராசிரியர்கள், பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு என மொத்தம் ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் கூரைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் வெறும் 10 ஆயிரம் லிட்டரை மட்டுமே மருத்துவக்கல்லுாரிக்கு வழங்குகிறது.இந்த தண்ணீர் மாணவர்கள் விடுதியின் பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இதில் மீதமுள்ள பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் இருந்து லாரிகள் மூலம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலையே தொடர்கிறது.இங்குள்ள பேராசிரியர்கள், பணியாளர்கள் குடியிருப்புகளில் குடும்பத்துடன் தங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை. அரசின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தண்ணீர் பற்றாக்குறையால் உபயோகிக்க முடியாமல் பாழாகி வருகிறது.இந்த பிரச்னை வெளியே தெரியும் போது எல்லாம் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தண்ணீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தேவையான தண்ணீரை காலம் தாழ்த்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பேராசிரியர்கள், பணியாளர்கள் குடியிருப்புகளில் வசிப்பது சாத்தியமாகும்.