ஒலி மாசால் விசைத்தறி கூடத்திற்கு சீல் எதிர்ப்பு தெரிவித்த --நெசவாளர்கள்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விசைத்தறியின் ஒலியால் பாதிப்பு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை ஒட்டி சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டி கம்பர் தெரு, பெருமாள் கோவில் சன்னதி தெரு உள்ளிட்ட ஐந்து தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இவற்றின் மூலம் பருத்தி சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவர் விசைத்தறி ஒலியின் காரணமாக தனக்கு இடையூறும், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுவததுடன், நகராட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் விசைத்தறிகள் இயங்குவதாகவும் பாதிப்பு ஏற்படுத்தும் விசைத்தறிக் கூடங்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி விதிகளை மீறி விசைத்தறிகள் இயங்கினால் அவற்றை நிறுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு பெருமாள் கோயில் சன்னதி தெருவில் இயங்கி வரும் ஆறுமுகப்பெருமாள், சக்தி மணி ஆகிய இருவரின் விசைத்தறி கூடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. தகவல் அறிந்த நெசவாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் சமாதானம் செய்து நகராட்சி கமிஷனரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட கூறியதால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.