மதுரையில் பஸ் கிளம்பும் போது காரியாபட்டி பயணிகளை ஏற அறிவுறுத்துவதால் வேதனை
காரியாபட்டி : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பஸ் கிளம்பும் போது தான் காரியாபட்டி பயணிகள் ஏற வேண்டும் என அறிவுறுத்துவதால் வேதனை அடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.காரியாபட்டி சுற்று பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தனியார், அரசு பஸ்களில் காரியாபட்டி, கல்குறிச்சிக்கு ஏற முற்படும் பயணிகளை பஸ் கிளம்பும் போது தான் ஏற வேண்டும் என டிரைவர், கண்டக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். வயதானவர்கள், கை குழந்தை வைத்திருப்பவர்கள், நோயாளிகள் நீண்ட நேரம் வெளியில் நிற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரியாபட்டி உள்ளிட்ட இடைப்பட்ட ஊர்களுக்கு கட்டணம் குறைவு என்பதால் அருப்புக்கோட்டை அதை தாண்டிய ஊர்களுக்கு பயணிகள் ஏறிய பின் தான் மற்ற பயணிகள் ஏற வேண்டும் என்கின்றனர். இப்பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர முடிவு எட்டப்படவில்லை. காரியாபட்டி சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பயணிகள் தினமும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். அப்படி இருக்கும்போது காரியாபட்டிக்கு பஸ் ஏற முற்படும் பயணிகளை காக்க வைப்பதால் வேதனை அடைகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.