மனைவி சுடுதண்ணீர் ஊற்றியதில் காயமடைந்த தொழிலாளி சாவு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், புதிய அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ், 48. இவரது மனைவி அமராவதி, 39. தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர். தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அமராவதி, அடிக்கடி இரவு நேரங்களில் மொபைல்போனில் பலரிடம் பேசி வந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. டிச.,18ம் தேதி இரவிலும், அமராவதி மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், சுரேஷ் துாங்க சென்றார். ஆத்திரத்தில் அமராவதி, தண்ணீரை கொதிக்க வைத்து, துாங்கிக் கொண்டிருந்த சுரேஷ் மீது ஊற்றியதில், சுரேஷ் பலத்த காயமடைந்தார். வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் அமராவதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.