உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு ஆர்வம் குறைகிறதா? மத்திய பிராந்திய படை தலைமை தளபதி பேட்டி

ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு ஆர்வம் குறைகிறதா? மத்திய பிராந்திய படை தலைமை தளபதி பேட்டி

சென்னை: ''இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்பி, இந்திய மிலிட்டரி அகடமிக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறைவு தான். இதனால், இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணியாற்ற ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூற முடியாது'' என, ராணுவ மத்திய பிராந்திய படைத் தலைமைத் தளபதி அலுவாலியா கூறினார்.

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி ராணுவ அதிகாரிகளின் நிறைவு அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்திய ராணுவத்தின் மத்திய பிராந்திய படையின் தலைமைத் தளபதி வி.கே.அலுவாலியா அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவர் அளித்த பேட்டி: இந்திய ராணுவத்தில், அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது உண்மை தான். இன்றைய நிகழ்ச்சியின் மூலம், 352 ஆண், பெண் அதிகாரிகள், ராணுவத்தில் அதிகாரியாக இணைந்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கு, பரங்கிமலை பயிற்சி மையம் மூலம் தேர்வானவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதைத் தவிர, பீகார் மாநிலம் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 135 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு மட்டும், ஆண்டுக்கு, 750 பேருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது, எங்கள் இலக்கு. ஆனால், இதற்கு அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் ஆகும். இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்பி, டேராடூனில் உள்ள இந்திய மிலிட்டரி அகடமிக்கு வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், காலிப் பணியிடங்கள் மிகவும் குறைவு தான். இதனால், இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணியாற்ற ஆர்வம் குறைந்து விட்டது என்று கூற முடியாது. இவ்வாறு, வி.கே.அலுவாலியா கூறினார். அதிகாரி அபினவ் சுக்லாவிற்கு தங்கப் பதக்கம் மற்றும் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. உளவுத்துறை பிரிவில் இடம் பிடித்த கனாவே லால்ஜி என்ற பெண் வீராங்கனை, தன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக, ராணுவத்தில் பணியாற்ற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி முடிவில் சோகம்! உத்தராஞ்சல் மாநிலம், முசுறியைச் சேர்ந்த வருண் துகால் என்ற வீரர் பயிற்சியை நிறைவு செய்ததும், சக வீரர்களுடன் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், தன் பெற்றோரைத் தேடி அலைந்தார். அப்போது, அவரின் வயதான தாத்தா மட்டுமே நிகழ்ச்சிக்கு வந்திருப்பது தெரியவந்தது. தன் பெற்றோர் குறித்து, தாத்தாவிடம் விசாரித்த போது, உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம், அவரின் தந்தை காலமானது தெரிய வந்தது. இந்தத் துயரச் செய்தியைக் கேட்டதும், வருண் துகால் பயிற்சி நிறைவு மைதானத்திலேயே கதறி அழுதார். அவரை ராணுவ அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். தான் ராணுவத்தில் அதிகாரியாக இணைந்துள்ளதை, தன் தந்தை பார்க்க முடியாமல் போன சோகத்தை எண்ணி, வருண் துகால் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை