சென்னை: கடந்த 2007ம் ஆண்டு, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், மேயர் , மாவட்ட செயலர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரி, பா.ஜ., வழக்கறிஞர்கள் அணி சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகச் செயலர் வடிவேலு தலைமையில், மாநில மகளிர் அணி செயலர் வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: சேது சமுத்திர திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக, ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, ராமர் பற்றியும், அவரது தொழில் நுட்ப அறிவு பற்றியும் விமர்சித்தார். ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், ராமரைப் பற்றி இழிவாகப் பேசுவோரது தலையையும், நாக்கையும், துண்டிப்போர்க்கு எடைக்கு எடை தங்கம் வழங்குவதாகக் கூறியதாகச் செய்தி வெளிவந்தது. அப்போது, தி.மு.க., அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, 'வேதாந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், சங் பரிவாரை சேர்ந்தவர்கள், தமிழகத்திலேயே நடமாட முடியாது. பா.ஜ., அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்' என்று அறிவித்தார். தொடர்ந்து, 2007 செப்டம்பர் 23ம் தேதி, காலை தி.மு.க., தொண்டர்கள், பா.ஜ., அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் காயமடைந்தனர்.
அமைச்சராக இருந்த பரிதிஇளம் வழுதி, மேயர் சுப்ரமணியன், தென் சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன் மற்றும் முன்னணி நிர்வாகிகள், அலுவலகம் அமைந்துள்ள வைத்தியநாதன் தெரு முனையில், போராட்டக்காரர்களைத் தூண்டும் விதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். காவல் துறையும் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவு பெறப்பட்டும், முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தாக்குதல் தொடர்பாக, பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களும் சாட்சிகளாகச் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வானதி ஸ்ரீநிவாசன் கூறும்போது,'' புகாரில் நாங்கள் ஏற்கனவே, ஆற்காடு வீராசாமி, பரிதிஇளம் வழுதி, மேயர் சுப்ரமணியன், அன்பழகன் பெயர்களை குறிப்பிட்டிருந்தோம். குற்றப்பத்திரிகையில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. 2007ம் ஆண்டு, இதே தினத்தில் தான் சம்பவம் நடந்தது. தற்போது மீண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமிஷனரிடம் மனு அளித்தோம். அவரும், நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்'' என்றார்.