உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாய்பாபா அறக்கட்டளை சொத்து: நடிகை அஞ்சலிதேவி யோசனை

சாய்பாபா அறக்கட்டளை சொத்து: நடிகை அஞ்சலிதேவி யோசனை

சென்னை: ''சாய்பாபா அறக்கட்டளை சொத்துகளை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்'' என, பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான், சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தையாக, 48 வருடங்களாக உள்ளேன். நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்த நேரத்தில், 1963ம் ஆண்டு என் தந்தைக்கு சமமான சித்தூர் நாகய்யா என்னையும், என் கணவர் ஆதிநாராயணராவையும் சாய்பாபாவிடம் முதல் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். சாய்பாபா தரிசனம் என் வாழ்வில், மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சாய்பாபா என்னுடைய கஷ்டங்களை தெரிந்து கொண்டு, எனக்கும், என் கணவருக்கும் அரிதான அறிவுரைகளை வழங்கினார். பின் என் கஷ்டங்கள் எல்லாம் பனி போல கரைந்தன. பக்தர்களின் இன்னல்களை முன்கூட்டியே அறிந்து தீர்ப்பதே சுவாமியின் சிறப்பு. எத்தனையோ பக்தர்களின் வாழ்வை ஆனந்த மயமாக்கியதால், நிறைய பக்தர்கள் சுவாமியிடம் சரணாகதி அடைந்தனர்.

நான் வசிக்கும் இல்லத்தின் பக்கத்திலுள்ள இல்லத்தை சுவாமிக்கு நன்கொடையாக கொடுத்தேன். அதை அவர் மேற்பார்வையில் கட்டி, அந்த இல்லத்திற்கு 'சுந்தரம்' என பெயரிட்டார். இன்று 'சுந்தரம்' பல பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கும், பஜனை போன்ற சேவைகளுக்கும் பயன்படுகிறது. மேலும், பாபாவின் கதையை, 'ஷீரடி சாய் பர்தி சாய் திவ்ய கதை' என்ற டெலிசீரியலை 'டிவி'க்களில் ஒளிபரப்பச் செய்தேன். இன்று சுவாமியுடைய அறக்கட்டளையில், கோடான கோடி பக்தர்கள் கொடுத்த நன்கொடை பணமாகவும், பொருளாகவும் இருக்கின்றன. அதனால், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல நல்ல திட்டங்கள் நடந்து வருகின்றன. இலவச படிப்பு, அன்னதானம், மருத்துவ சேவை என, பல உன்னத திட்டங்கள் இயங்கி வருகின்றன. அரசால் நிறைவேற்ற முடியாத குடிநீர் பிரச்னையை, பலர் பயன்படும்படி சுலபமாக நிறைவேற்றினார் சாய்பாபா. இன்று சாய்பாபா நம்மிடையில் இல்லையென்றாலும், நம் மனதிலும், கோடான கோடி பக்தர்கள் இதயத்திலும் நிலைத்திருப்பார். சாய்பாபா அறக்கட்டளை சொத்துகளை கொண்டு, மேலும் பல நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என, அறக்கட்டளை உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அஞ்சலிதேவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை