உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரபாண்டி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்?

வீரபாண்டி ராஜேந்திரனை கைது செய்யாதது ஏன்?

தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திரன் மீது கொடுக்கப்பட்ட திருட்டு புகார் தொடர்பாக, ஐகோர்ட் உத்தரவிட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதை, உளவுத் துறை போலீசார், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார், சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமான ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்ததாக, ராஜேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றதால், அவரை போலீசாரால் கைது செய்ய இயலவில்லை. சேலம் ஏற்காடு மெயின் ரோட்டைச் சேர்ந்த ஜெயபால் மனைவி கனகா. சேலம் ஏற்காடு ரோட்டில் வசிக்கும் இவருக்கு, உத்தமசோழபுரத்தில் வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியின் எதிரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 1,250 அடி நீளமுள்ள முள்வேலி கம்பி போடப்பட்டிருந்தது. வி.எஸ்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரியின் உரிமையாளரும், அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த வீரபாண்டி ராஜேந்திரனும், அவர் ஆட்களும், 2009 அக்டோபர் 30ல், கம்பி வேலியை துண்டித்தும், கல் தூண்களை அகற்றியும், அத்துமீறி, நிலத்தில் நுழைந்தனர். இது தொடர்பாக நவம்பர் 4ம் தேதி, சேலம் மாவட்ட கோர்ட்டில், ராஜேந்திரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. பிரச்னைக்குரிய இடத்துக்குள் நுழைய, வீரபாண்டி ராஜேந்திரனுக்கு, கோர்ட் தடை விதித்தது.

இந்நிலையில், 2011, பிப்ரவரி 15ம் தேதி, இரவு, கற்களையும், 1,250 அடி நீளமுள்ள முள்வேலி கம்பிகளையும் எடுத்துச் சென்று விட்டனர்; இவற்றின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய். இது குறித்து, பிப்ரவரி 16ம் தேதி மதியமே, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றபோது, போலீசார் வாங்க மறுத்து விட்டனர். கனகா, ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். ஐகோர்ட், திருட்டு வழக்கை விசாரித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரித்த போலீசார், அத்துமீறி நுழைதல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், குற்றவாளியை கண்டுபிடிக்க இயலவில்லை என, தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு மற்றும் புகார் குறித்து உளவுப் பிரிவு போலீசார், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை