| ADDED : செப் 25, 2011 05:49 AM
சென்னை:'சட்டசபைத் தேர்தலைப் போல், உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெற, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கடுமையாக உழைக்கும்' என, அதன் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பாசறையின் மாநிலச் செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலர் பொன்னையன், கொள்கை பரப்புச் செயலர் தம்பிதுரை, மகளிர் அணிச் செயலர் கோகுல இந்திரா உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாசறையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
'சட்டசபைத் தேர்தலைப் போல், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும், இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர் கடுமையாக உழைத்து, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப் பாடுபடுவது' என்பது உட்பட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.