உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் பி.சி., பட்டியலில் 30 ஜாதிகள்: ஆணையம் பொது விசாரணை

மத்திய அரசின் பி.சி., பட்டியலில் 30 ஜாதிகள்: ஆணையம் பொது விசாரணை

சென்னை: மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த, 30 ஜாதிகளைச் சேர்ப்பதற்கான பொது விசாரணைக் கூட்டம் சென்னையில் நடந்தது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவில் தமிழகத்தில், சில ஜாதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில், மேலும் 30 ஜாதிகளைச் சேர்ப்பது தொடர்பாக, குறிப்பிட்ட ஜாதிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களைப் பெற, இரு நாள் பொது விசாரணையை, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்தியது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எம்.என்.ராவ் தலைமையில், உறுப்பினர்கள் முன்னாள் எம்.பி., கார்வேந்தன், ஷகில் உஸ் ஜமான் அன்சாரி, தீபக் கட்டுலே ஆகியோர் அடங்கிய குழுவினர், பல்வேறு ஜாதிகளின் பிரதிநிதிகளிடம் நேரடி விசாரணை நடத்தினர். மாநில அரசின் சார்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் (5ம்தேதி) நடந்த விசாரணையில், பாண்டிய வெள்ளாளர், சேரகுல வெள்ளாளர், வல்லநாட்டுச் செட்டியார், லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்துவ வண்ணார் (கன்னியாகுமரி மாவட்டத்தில்), தொரையர் (சமவெளி), ஷத்திரிய ராஜு, எர்ர கொல்லர் (தொட்டிய நாயக்கர் பிரிவின் உட்பிரிவு), ரெட்டி (கஞ்சம்), கணியாள வெள்ளாளர், ஓ.பி.எஸ்., வெள்ளாளர், பையூர் கோட்ட வெள்ளாளர், மூன்று மண்டை 84 ஊர் சோழிய வெள்ளாளர், குடிகார வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வெள்ளாளர், ஷேக் ஆகிய 15 ஜாதிகளின் பிரதிநிதிகள், ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர். இரண்டாம் நாளான நேற்று (6ம்தேதி) சையத், அன்சார், காசுக்காரச் செட்டியார், அகரம் வெள்ளான் செட்டியார், சுந்தரம் செட்டி, உரிக்கார நாயக்கர், உக்கிரகுல ஷத்திரிய நாயக்கர், ஆயிர வைசியர், கொங்கு வைஷ்ணவா, சவுத்திரி, கன்னடிய நாயுடு, லிங்காயத், சேர்வை, ஆர்ய வைஸ்யா ஆகிய 15 ஜாதிகளைச் சேர்ந்தோர், ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர். தங்கள் ஜாதியினை, மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும் வகையில், ஜாதியின் தோற்றம், மக்கள் தொகை, பொருளாதார நிலை, வாழ்விடங்கள், தொழில் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை, ஜாதி அமைப்பினர் ஆணையத்திடம் அளித்தனர். இது தொடர்பான ஆதாரங்களை, ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாக விசாரித்து அறிந்தனர். இந்த விசாரணைக்குப் பின், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் எம்.என்.ராவ், முன்னாள் எம்.பி., கார்வேந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள், நேற்று மாலை கவர்னர் ரோசையாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி