| ADDED : செப் 24, 2011 12:02 AM
மதுரை: மதுரையில், லஞ்சப் புகாரில் 'சஸ்பெண்ட்' ஆன அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், அந்த உத்தரவைப் பெறாமல் இருக்க, நெல்லையில் பொறுப்பேற்கச் சென்றார். ஒரு மாதத்திற்கு முன் போடப்பட்ட, நெல்லை இடமாற்ற உத்தரவை காரணமாக வைத்து, அங்கு பணியில் சேர, கஜேந்திரன் சென்றதை அறிந்த எஸ்.பி., அலுவலக அதிகாரிகள், டி.ஐ.ஜி., வரதராஜு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, 'சஸ்பெண்ட்' விவரத்தைத் தெரிவித்தனர். 'உடனடியாக வந்து 'சஸ்பெண்ட்' உத்தரவைப் பெறாவிட்டால், தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என, எச்சரித்ததைத் தொடர்ந்து, மதுரை திரும்பிய கஜேந்திரன், 'சஸ்பெண்ட்' உத்தரவைப் பெற்றுக் கொண்டார். செப்.,15 ல் பனையூர் கொலை வழக்கில், சம்பந்தப்பட்டவரை வழக்கில் சேர்க்காமல் இருக்க, 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக எழுந்த புகாரின்படி, நேற்று முன் தினம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.