பெரம்பலூர்: தடையின்மை சான்று வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் எஸ்.பி., அலுவலக இளநிலை உதவியாளரை, போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர் அருகே, சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த, மாரிமுத்து மகன் மணி, 24. கேட்டரிங் படித்த இவர், வெளிநாடு செல்வதற்காக, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.கடந்த 12ம் தேதி, பெரம்பலூர் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவு அலுவலக, இளநிலை உதவியாளரான நல்லுசாமி, 46, என்பவரை, மணி சந்தித்தார். தடையின்மை சான்று வழங்க, 1,000 ரூபாய் வழங்குமாறு கூறவே, நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, நேற்று காலை 11 மணிக்கு லஞ்சத் தொகை, 1,000 ரூபாயை நல்லுசாமியிடம், மணி வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நல்லுசாமியை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர். சத்திரமனை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில், ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.